புயல் எப்படி உருவாகிறது? எவ்வாறு கரையை கடக்கிறது என்று தெரியுமா?

0

மனிதன் எவ்வளவு தான் அறிவாற்றல் பெற்றாலும் இயற்கை அழிவுக்கு முகம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான் என்பது தான் கசக்கும் உண்மை.

இயற்கைப் பேரிடர்களில் புயல் ஒரு முக்கிய இடத்தை வகித்தாலும், இக்கால அறிவியல் வளர்ச்சியால் புயல் எங்கு எப்போது தாக்கும் என்பதை முன்கூட்டியே கணிக்க நம்மால் முடிகிறது. ஆனால் பூகம்பம் மற்றும் சுனாமியைத்தான் நம்மால் சரியானபடி கணித்துக்கூற இயலவில்லை. புயல் எவ்வாறு உருவாகிறது என்பதைப் பார்க்கலாம். இதற்கு வெப்பச்சலனம் முக்கிய காரணியாக அமைகிறது. புயலை ஒரு பஸ் போன்ற எந்திரமாக உருவகித்துக் கொண்டால், அது இயங்குவதற்கு தேவையான டீசலாக சூடான நீர் மிகுந்த காற்று பயன்படுகிறது.

வெப்ப காலங்களில் அதிகச் சூட்டினால் கடல் மட்டத்தில் உள்ள நீர் ஆவியாகி காற்றோடு கலந்து பூமியின் மேல்மட்டத்தை நோக்கிச் செல்கிறது. அப்போது கடல் மட்டத்தில் காற்று குறைவதால் குறைந்த அழுத்தம் உருவாகிறது. எனவே இதனை ஈடுசெய்ய சுற்றுப்பகுதியில் உள்ள அதிக அழுத்தம் உள்ள காற்று அந்த இடத்தை நோக்கிப் பாய்கிறது. மறுபடியும் இங்கிருந்து நீர் ஆவியாகி காற்றோடு கலந்து மேலே செல்கிறது. இவ்வாறு தொடர்ந்து நடப்பதால் ஒரு சுழல் உண்டாகிறது. இதுவே புயல் உருவாகக் காரணமாகும்.

இப்போது புயல் ஏன் தரையில் இருந்து உருவாவதில்லை என்ற கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கும். புயல் உருவாக நீர் கட்டாயம் தேவை. மேலும் பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே புயல் உருவாகிறது ஏன் என்பதையும் பார்க்கலாம். கடல் நீர் வெப்பமடைய சூரிய ஒளி தேவை. சூரியனது சஞ்சாரம் தெற்கே மகர ரேகைக்கும், வடக்கே கடக ரேகைக்கும் உட்பட்ட பகுதிகளில் மட்டுமே உள்ளது. எனவே இந்தப் பகுதிகளில் மட்டுமே சூரியனின் நேர் பார்வையால் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இவை வெப்பமண்டலம் என்று அழைக்கப்படுகின்றன. எனவேதான் இந்தப் பகுதிகளில் அடங்கியுள்ள கடல் மட்டங்களில் மட்டுமே புயல் உருவாவதைக் காண்கிறோம். இதையொட்டிய நாடுகளையே புயல் பாதிக்கிறது.

இன்று பலருக்கும் புயல் எப்படி உருவாகிறது? எப்படி கரையை கடக்கிறது? என தெரிவதில்லை. காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சலனம்’. ஈரக்காற்றை பொறுத்தவரையில், அது வெகு உயரம் செல்லாமல், வானில் தாழ்விடங்களில் தாங்கும். இதனால், காற்றின் அழுத்தம் அதிகரிப்பதால், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது.

இந்த காற்றானது மணிக்கு 31கி.மீ வேகத்தில் வீசினால் அது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகும். இந்த காற்று பம்பரம் போல் வேகமாக சுழல ஆரம்பித்தால், அது தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாகும்.

இந்த காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்க, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறுகிறது. இது மணிக்கு, 63 கி.மீ வேகத்தை எட்டும் போது, புயல் என கணிக்கப்படுகிறது. இதில் புயல்களின் கண் என அழைக்கப்படும் பகுதியானது, 30 முதல் 60 கி.மீ விட்டம் கொண்டதாக இருக்கும். புயலின் வட்ட வடிவம் 30 முதல் 2,000 கி.மீ வரை இருக்கலாம்.

இதனை செயற்கைக் கோள் படத்தின் மூலம் பார்க்கும் போது, இது சுருள் போன்று தோன்றும். அதன் வேகத்தையும், பரப்பளவையும், அடர்த்தியையும் பொறுத்து, புயலின் வலிமையை புரிந்து கொள்ள முடியும். இந்த சுழலும் மேக கூட்டத்தை உள்ளடக்கி உள்ள காற்று, நகர்ந்து கரையை அடையும் போது, நிலப்பகுதியை சூறாவளிப்புயலுடன் கூடிய மழையாக தாக்குகிறது. இந்த காற்றானது, நிலத்தில் நீண்ட நேரம் பயணிக்கும் போது, இந்த காற்று வலுவிழந்து விடும்.

Leave A Reply

Your email address will not be published.