ஒரு கிழமைக்குள் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக உறுதிமொழி !கைவிடப்பட்டது போராட்டம்

0

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தமக்கு வழங்கப்பட்ட வீடுகளுக்கான மிகுதி கொடுப்பனவுகள் வழங்கப்படாது பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தமது வீட்டுத்திட்டத்திற்கு மீதி கொடுப்பனவுகளை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்று பிரதேச செயலக வாயில்  கதவுகளை மூடி அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்டனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான வீடுகளுக்கான கொடுப்பனவு வழங்கப்படாமல் இன்றும் காணப்படுகின்றது

இந்நிலையில் வீட்டுத்திட்டத்தை பெற்றவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்துள்ளனர் ஆரம்ப கொடுப்பனவு வழங்கப்பட்ட போதும் மீதி கொடுப்பனவு வழங்கப்படாமை காரணமாக பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள மக்கள் தமது கொடுப்பனவை மிக விரைவாக பெற்றுத் தருமாறு கோரியே குறித்த  போராட்டத்தை முன்னெடுத்தனர்

இன்று காலை பத்து மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக ஆரம்பித்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் வரை சென்று அங்கு பல்வேறு தரப்பினர்களுக்கான மகஜர்கள் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தி.ஜெயகாந்தனிடம் கையளிக்கப்பட்டது குறித்த மகஜர்களை பெற்றுக்கொண்ட பிரதேச செயலாளர்  உங்களுடைய கஸ்ர நிலைமைகள் எமக்கு தெரியும் எனவும் உரிய தரப்பினருக்கு மகஜர்களை அனுப்பி உரிய தீர்வை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்

இருப்பினும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உயர் அதிகாரிகள் வந்து உடனேயே தீர்வை சொல்லவேண்டும் என தெரிவித்து கொட்டும் வெய்யிலில்  பிரதேச செயலக வாயில்  கதவுகளை மூடி அதிகாரிகளை  சிறைப்பிடித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள்  குறித்த பகுதிக்கு  வருகைதந்து குறித்த வீட்டுத்திட்ட தற்போதைய  நிலைமைகளை தெளிவுபடுத்தி தாம் தீர்வுகளை பெற்றுத்தருவதாகவும்  மக்களை கலைந்து செல்லுமாறும் கோரிய போதும் உடனடியாக தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரி தொடர் போராட்ட்த்தில் ஈடுபட்டனர்

இறுதியாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்ட கணக்காளர் என்.பழனிவேல் அவர்கள் வருகைதந்து நிலைமைகளை விளக்கினார் இருப்பினும் மக்கள் உடனடியாக உங்களது உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுத்தாருங்கள் என்று கோரி தொடர்ந்து போராடினர் பலமணி நேரமான போராட்டங்களின் இறுதியாக ஒரு வார காலப்பகுதிக்குள் உங்களுக்கான உரிய தீர்வுகளை பெற்றுத்தருவதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை முல்லைத்தீவு மாவட்ட கணக்காளர் என்.பழனிவேல்  அவர்கள் கூறியதற்கமைவாக தாம் தற்போது கலைந்து செல்வதாகவும் ஒரு கிழமைக்குள் தீர்வு பெற்று தரவில்லையாயின் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறி மூன்று மணியளவில் போராட்டம்  முடிவுக்கு கொண்டுவரப்பட்டது .

-முல்லைத்தீவு நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.