மாதோட்டம் மணற்குளம் புகையிரத கடவையை பாதுகாப்பான முறையில் அமைத்து பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமிக்குமாறு மக்கள் கோரிக்கை.

0
நானாட்டான்-உயிலங்குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் மாதோட்டம் மணற்குளம் புகையிரத கடவையை  பாதுகாப்பான முறையில் அமைத்து,குறித்த புகையிரத கடவைக்கான பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமிக்குமாறு மக்கள் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக குறித்த பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் புகையிரதத்தில் மோதும் நிலையில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் அப்பகுதி பொது மக்களுடன் இணைந்து  குறித்த கோரிக்கையை முன் வைத்தனர்.
இவ்விடையம் தொடர்பாக  அவர்கள் தெரிவிக்கையில்,,, 
கடந்த மூன்று தினங்களுக்கு முன் நானாட்டான் உயிலங்குளம் குளம் பிரதான வீதியில் அமைந்துள்ள மாதோட்டம் புகையிரத கடவையில் அடிபட்டு உயிரிழக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தது தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டு இருந்தேன்.
 இந்தப் புகையிரத கடவை ஊடாக தினமும் ஒரு மணித்தியாலத்திற்கு  200க்கும் மேற்பட்ட நபர்கள் பிரயாணம் செய்கின்றர்கள்.
குறித்த வீதியூடாக  பாடசாலை மாணவர்கள் , வயோதிபர்கள்  என அனைவரும் சென்று வருவதோடு, பல வாகனங்களும்    24 மணி நேரமும் குறித்த வீதியூடாக பயணிக்கின்றது.
இந்த நிலையில் கொழும்பில் இருந்து தலைமன்னாரிற்கு  புகையிரத சேவை ஆரம்பித்த காலத்திலிருந்து குறித்த மணற்குளம் புகையிரத கடவை பாதுகாப்பற்றதாகவும் பாதுகாப்பு ஊழியர் இல்லாமலும் பல உயிர்கள் காவு கொள்ளப்படும் நிலையிலிருந்தது அருகில் இருக்கும் கடை ஒன்றில் உள்ளவர்களின் அவதானிப்பில் தான் பல உயிர்கள் விபத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
எனவே தலைமன்னாரில் நடந்த அந்த கோர விபத்து சம்பவம் ஒன்று மீண்டும் எமது பிரதேசத்தில் நடக்கக் கூடாது என்பதற்காக குறித்த  சம்பவத்தை மன்னார் மாவட்ட செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
மேலும், தற்போது உயிலங்குளம் நானாட்டான் பிரதான வீதி கார்பெட் வீதியாக புனரமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருப்பதால் முன்பை விட பொது மக்கள் பாடசாலை மாணவர்கள்  மற்றும் அதிகமான வாகன போக்குவரத்துக்கள்  குறித்த வீதியூடாக இடம் பெற்று வருகின்றது.
மாதோட்டம் மணற்குளம் புகையிரத நிலையத்தில்  பாதுகாப்பான புகையிரத கடவையாக அமைத்து  பாதுகாப்பு ஊழியர் ஒருவரை நியமித்து எமது மக்களை பாதுகாக்க உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-மன்னார் நகர் நிருபர்-

Leave A Reply

Your email address will not be published.